Thursday, July 25

தாமோதரம்பிள்ளை. சி.வை

0

          தொல்காப்பியத்தைத் தேடிக் கண்டு பிடித்து நமக்களித்தவர்,          சி. வை .தாமோதரம்பிள்ளை அவர்களின் பணியின் பெருமை பேசப்படவேண்டியதொன்றே.       

 1832 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாள் யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். சார்லஸ் வினஸ்லோ கிங்ஸ்பரி (Charles Winslow Kingsbury) என்பது இவரது இயற்பெயர். தமிழ் மீது கொண்ட காதலால் மீண்டும் சைவ மதத்துக்கு   மாறி தேவாரம் திருவாசகம் பயின்றார். தன் பெயரை சி. வை .தாமோதரம்பிள்ளை என்று மாற்றிக் கொண்டார். யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு  குடிபெயர்ந்த சி. வை .தாமோதரம்பிள்ளை அவர்கள் சிலகாலம், புதுக்கோட்டையிலும் வாழ்ந்தார்.

பண்டைய சங்கத் தமிழ் காப்பியங்களின் ஓலைச் சுவடிகள் கறையான் தின்று அழிந்து போகாது, தனது கடின உழைப்பால் தேடி  அவற்றை மீட்டு, படித்து, படியெடுத்து, ஒப்பிட்டு ஆய்வு செய்து அனைவரும் பயன் பெறும் வகையில் அவற்றை அச்சிட்டு வெளியிட்டவர் சி. வை .தாமோதரம்பிள்ளை ஆவார்.

1853ஆம் ஆண்டு நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறித் தமிழ் நூலைப் பதிப்பித்து    புத்தக வெளியீட்டுத்துறையில்  முன்னோடி எனும் பெருமையையும் பெற்றார். இவர், யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை (தற்போதைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) அதிபராக இருந்த பீட்டர் பெர்சிவல் பாதிரியார் தமிழ் நாட்டில் நடத்திவந்த தினவர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1853ஆம் ஆண்டு சென்னை வந்தார். அத்துடன் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் கடமையாற்றினார்.

1858இல் சென்னை பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார். பின்பு தமிழ் நாட்டில்,  கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியரா னார். அதன்பின் அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாள ரானார். தொடர்ந்து சட்டம் பயின்ற அவர், 1871 இல் ‘பி.எல்.’ தேர்வில் வெற்றி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1884 ஆம் ஆண்டு புதுக்கோட்டை  நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற தாமோதரம்பிள்ளை அவர்கள் 1895ஆம் ஆண்டு ராவ் பகதூர் பட்டமளித்தது பாராட்டப்பட்டார்.

பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரத்தை  அவர் தனது கடும் உழைப்பினால் தேடிக் கண்டுபிடித்து, அதனை அச்சிட்டு வெளியிட்டபோது அதனை வியந்து பாராட்டாதோர் எவரும் இல்லை.

வை சி தா பதிப்பித்த நூல்கள்….

நீதிநெறி விளக்கவுரை                                                                                                –1854

தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை                 -1868

வீரசோழியம் பெருந்தேவனார் உரை                                                                     -1881

திருத்தணிகைப் புராணம்                                                                                         –1883

இறையனார் அகப்பொருள்

இறையனார்களவியல்                                                                                                                             –1881

தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை           –1885

கலித்தொகை                                                                                                                 –1887

இலக்கண விளக்கம்                                                                                                    –1889

சூளாமணி                                                                                                                      –1889

தொல்காப்பியஎழுத்திகாரத்திற்கானநச்சினார்க்கினியருரை                      –1891

தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர்                                      –1892

கட்டளைக் கலித்துறை

சைவ மகத்துவம்

வசன சூளாமணி

நட்சத்திர மாலை

ஆறாம் வாசகப் புத்தகம்

ஏழாம் வாசகப் புத்தகம்

ஆதியாகம கீர்த்தனம்

விவிலிய விரோதம்

காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)

தமிழின் காவலனாக வாழ்ந்த இவர் தமிழ்த் தொண்டில் தம்மை ஈடுபடுத்திய சான்றோர்கள் பலருள் தமிழ் வளர்த்த, தமிழ்காத்த, தமிழ்தந்தஎன்னும் அடைமொழிகளுடன் அழைக்கப்படும் தனிச்சிறப்பிற்கும், சென்னை அரசாங்கத்தினால் பட்டமளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட ஈழத்தவர் என்ற தனிச் சிறப்பிற்கும் உரியவராவார். 1852 – 1856 காலப் பகுதியில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். 1844 காலப்பகுதியில் வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்றவர்.

1856 காலப்பகுதியில் தமிழகத்திலிருந்து வெளியான தினவர்த்தமானி பத்திரிகையின் பத்திராதிபராகவும் பணியாற்றி  செயற்கரிய செயல்கள் பல புரிந்த இப்பெரியார் 1901.01.01 ஆம் நாள் சென்னை  புரசைவாக்கம்  என்னும் வாழ்விடத்தில் தமது அறுபத்து ஒன்பதாம் வயதில் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

உ வே சாமிநாதன் அவர்கள் சி.வை. தாமோதரனார் இறந்த பொழுது எழுதிய இரங்கற்பா

“தொல்காப் பியமுதலாந்த தொன்னூல் களைப்பதிப்பித்து

ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின் – அல்காத

தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை

யாமோ தரமியம்ப வே”

நீடிய சீர்பெறு தாமோதர மன்ன, நீள்புவியில் –

வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புற நீ –

பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான்

கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறலரிதே!” 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!